தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பிறவிபட்டி கிராமத்தில் 11 மே திங்கள் 1979 அன்று பிறந்தார்.ஆரம்ப கல்வி அரசு தொடக்கப்பள்ளியிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வியை ஆ.வை,மேல்நிலைப்பள்ளி சாத்தூரிலும் நடுவப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் முடித்தார்.

மீன் வளர்ப்பு அனுபவங்களும், ஆலோசனைகளும்..!

இந்தியாவிலும், தமிழகத்திலும் மீன் வளர்ப்பு மிக முக்கிய தொழிலாக திகழ்கிறது. அதனால் மீன் வளர்ப்பை மையப்படுத்தி பல ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய மீன் வளர்ப்பு ஆராய்ச்சியாளர்களில், விருதுநகர் சாத்தூர் பிறவிபட்டியை சேர்ந்த முனியாண்டி தனிகவனம் பெறுகிறார்.

எளிமையாக-சுலபமாக மீன்களை வளர்க்கும்விதம், இயற்கை முறை மீன் வளர்ப்பு, மீன் பண்ணையில் தாவரங்களை வளர்க்கும் தொழில்நுட்பம், தட்ப வெப்ப மாற்றங்களுக்கு ஏற்ப மீன்களை வளர்க்கும் முறை போன்ற பல ஆராய்ச்சிகளில் வெற்றி கண்டு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அதை முயன்று பார்க்கிறார். மீன் வளர்ப்பிலும், ஆராய்ச்சியிலும் கிடைத்த அனுபவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டபோது...

* மீன் வளர்ப்பு துறையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

என்னுடைய கல்லூரி காலங்களில் என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்குதான் மவுசு அதிகம். ஆனால் நான் விலங்கியல் படிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன். அதைத்தொடர்ந்து முதுகலை படிப்பாக கடல் வாழ் உயிரிதொழில்நுட்பம் படிக்க ஆசைப்பட்டேன். ஏனெனில் கடல் உலகம் மிகவும் சுவாரசியமானது. எண்ணிலடங்கா உயிரினங்களால் நிரம்ப பெற்றது. அத்தகைய கடல் உலகை ஆராய ஆசைப்பட்டேன். அந்தசமயத்தில்தான் மலேரியா நோய்க்கு கடல் பாசிகளிலிருந்து மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆராய்ச்சிக்காக தேசிய விருதுகளும் வழங்கப்பட்டன. எனவே கடல் வாழ் உயிரினங்களை ஆராய்ந்து அதன்மூலம் மனிதர்களுக்கு தேவையான பல பொருட்களை உருவாக்கமுடியும் என்ற நம்பிக்கையில், கடல் ஆராய்ச்சி படிப்பில் கவனம் செலுத்தினேன். முதுகலை படிப்பை தொடர்ந்து, எம்.பில். மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளையும் கடல் சம்பந்தமாகவே முடித்திருக்கிறேன்.

* மீன் வளர்ப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகளை எப்போது தொடங்கினீர்கள்?

கல்லூரி படிப்பை முடித்தாலும், மீன் சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தேன். அதன்மூலம் வெளிநாட்டு இறால் பண்ணையில் வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. இறால்களை வளர்க்கும் பணியோடு, 4 வருடங்களாக என்னுடைய ஆராய்ச்சி பணிகளையும் செய்தேன். அதற்கு பிறகு இந்தியா திரும்பி, பென்னேரியில் சொந்தமாக மீன் ஆராய்ச்சி கூடம் ஒன்றை அமைத்து, பல ஆராய்ச்சிகளில் ஈடுபட ஆரம்பித்தேன்.

* இதுவரை எத்தகைய ஆராய்ச்சிகளை முன்னெடுத்திருக்கிறீர்கள்?

கண் புரை நோய்க்கு கடல் உறிஞ்சி மூலம் தீர்வு காண முடியும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறேன். பருவநிலை மாற்றம் காரணமாக கடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், கடல் உயிரினங்களின் உடல் அமைப்பிலும், வாழ்க்கை முறையிலும் ஏற்படக்கூடிய மாற்றங்களை ஆராய்ந்திருக்கிறேன். அதற்காக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் தங்கி, பல ஆய்வு பணிகளை மேற்கொண்டு, ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டோம். பிறகு உலக நாடுகளின் தட்ப-வெப்ப நிலைக்கு ஏற்ப, மீன்களை வளர்க்கும் முறைகளை ஆராய்ந்து, தற்போது பல நாடுகளில் மீன் வளர்ப்பு முறையை சுலபமாக்கி கொடுத்திருக்கிறேன்.   

* மீன் வளர்ப்பு ஆராய்ச்சிக்காக எந்தெந்த நாடுகளுக்கு எல்லாம் சென்றிருக்கிறீர்கள்?

சவுதி அரேபியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் எகிப்து போன்ற நாடுகளுக்கு மீன் வளர்ப்பு ஆராய்ச்சிகளுக்காக சென்று, அந்நாட்டு தட்ப-வெப்ப நிலைக்கு ஏற்ப மீன்களை வளர்க்கும் தொழில்நுட்பங்களையும், அதற்கான நுணுக்கங்களையும் கற்றுக்கொடுத்திருக்கிறேன். அந்தந்த நாடுகளில், மீன் வளர்ப்பிற்கான பிரத்யேக பண்ணைகளையும் அமைத்து கொடுத்து, மீன்கள் வளரும் விதத்தையும், அதன் ஆரோக்கிய நலன்களையும் ஆராய்ந்திருக்கிறேன்.  

* வெளிநாட்டில் நீங்கள் கண்டுவியந்தவை எவை?

இந்தியாவில் மழைப்பொழிவு அடிக்கடி நிகழ்கிறது. ஆறுகள், ஏரி, குளங்கள் எல்லாம் அடிக்கடி நிரம்பி வழிகின்றன. ஆனால் நீர் ஆதாரங்களுக்கு அறிகுறியே இல்லாத வறண்ட தேசங்களில்கூட நம்பிக்கையாக மீன் வளர்ப்பை முன்னெடுக்கிறார்கள். எகிப்து நாட்டில் மழைப்பொழிவு மிகக்குறைவு. இருப்பினும் எகிப்தியர்கள், நைல் நதியின் ஆற்றங்கரை ஓரங்களில் மீன் பண்ணைகளை அமைத்து, மீன் வளர்ப்பை வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள். ஆப்பிரிக்கா கண்டத்திற்கே இங்கிருந்துதான் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படும் அளவிற்கு, மீன் வளர்ப்பை லாபகரமானதாகவும், எளிமையானதாகவும் மாற்றியிருக்கிறார்கள்.

* மீன் வளர்ப்பு லாபம் தரக்கூடிய ஒன்றா?

நீர் ஆதாரம் இல்லாத எகிப்து நாட்டிலேயே மீன் வளர்ப்பு நல்ல லாபம் தரும்போது, நீர் ஆதாரம் நிரம்பப்பெற்ற இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் சிறப்பான தொழிலாகவே அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மீன் வளர்ப்பு பண்ணைகள் இயங்குகின்றன. மீன் வளர்ப்போடு நண்டு வளர்ப்பு, இறால் வளர்ப்பும் மிக முக்கிய தொழிலாக நடத்தப்படுகிறது. குறிப்பாக கடலோர கிராமங்களில் இறால் வளர்ப்பு பண்ணைகளை அதிகமாக காணமுடியும். தூத்துக்குடி பகுதிகளில் முத்து வளர்ப்பும் முன்னெடுக்கப்படுகிறது. உவர் வகை மீன் வளர்ப்பு மட்டுமின்றி நன்னீர் வகை மீன் வளர்ப்பும் சிறப்பான தொழிலாகவே அமைகிறது.

* அதிகம் லாபம் தரக்கூடிய மீன்வகைகள் எவை?

நாட்டு மீன்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. குறிப்பாக கட்லா, ரோகு, மிர்காள், உளுவை, கெழுத்தி, வெளிக்கெண்டை, புல்கெண்டை, ஊசி மீன், மரபியல் மாற்றம் செய்யப்பட்ட ஜிலேபியா, மஞ்சள் பாறை, கூனி, ஐ.எம்.சி. போன்ற மீன்களுக்கு உள்ளூர் மக்களிடையே நல்ல வரவேற்பு உண்டு. அதனால் இத்தகைய மீன்வகைகளைத்தான், பெரும்பாலான மீன் பண்ணைகளில் வளர்க்கிறார்கள். விற்று லாபம் பார்க்கிறார்கள்.

* மீன் வளர்க்க எவ்வளவு செலவாகும்? எவ்வளவு லாபம் கிடைக்கும்?

உதாரணத்திற்கு ஒரு கிலோ மீன் ரூ.250-க்கு விற்கப்படுகிறது என வைத்து கொள்ளுங்கள். மீன் தீவனம், பராமரிப்பு கூலி என ரூ.50 முதல் 80 வரை செலவாகலாம். மற்றபடி எல்லாமே லாபம்தான். மீனின் அறுவடை காலம் 6 மாதம் என்பதால், ஒருவருடத்தில் இருமுறை விற்று, சம்பாதிக்கலாம். மீன் பண்ணைகளில் டன் கணக்கில் மீன் வளர்க்கப்படுவதால், லாபமும் அதிகமாக கிடைக்கிறது.

* அக்வாபோனிக்ஸ் முறை பற்றி கூறுங்கள்? தமிழகத்தில் அக்வாபோனிக்ஸ் முறைக்கு வரவேற்பு கிடைக்கிறதா?

விவசாயம், மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு இவை மூன்றையும் ஒருங்கே செய்வதைத்தான் அக்வாபோனிக்ஸ் என்பார்கள். வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பம் தமிழ்நாட்டிலும் பின்பற்றப்படுகிறது. ஆனால் இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் குறைவுதான். கேரள மக்கள் அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு, அதன்மூலம் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.

* அக்வாபோனிக்ஸ் முறையை தமிழ்நாட்டின் எந்த பகுதியில் முழுமையாக உபயோகப்படுத்தமுடியும்?

வயல்வெளிகள் நிறைந்த தஞ்சை பகுதியில் அக்வாபோனிக்ஸ் முறையை உபயோகிக்கலாம். வயல்வெளிகளுக்கு நடுவே மீன் வளர்ப்பையும், நண்டு வளர்ப்பையும் முன்னெடுத்து, அதன்மூலம் வயல்வெளிக்கு இயற்கை உரம் பாய்ச்சலாம். வயல்வெளிக்கு நடுவே சிறுசிறு வரப்புகள் அமைத்து, அதில் மீன்களை நீந்தவிட்டு, வளர்க்கலாம். இதனால் கூடுதல் லாபமும் கிடைக்கும், இயற்கை முறை விளைச்சலும் கிடைக்கும்.

* மீன் வளர்ப்பிற்கு அரசு தரப்பில் மானியம் வழங்கப்படுகிறதா?

மானியம் உண்டு. ஆனால் இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் சற்று குறைவான மானியமே தமிழ்நாட்டில் கிடைக்கிறது. ஆந்திர மாநிலத்தில் மீன் வளர்ப்பிற்கு ஏராளமான சலுகைகளும், மானியங்களும் வழங்கப்படுவதால், நெல்லூர், கடப்பா பகுதிகளில் மீன் பண்ணைகள் அதிகளவில் இயங்குகின்றன.

* நன்னீர் நாட்டு மீன்களை மக்கள் விரும்புகிறார்களா?

கடல் மீன்களுக்கு எந்தளவிற்கு தேவை இருக்கிறதோ, அதே அளவிற்கு நன்னீர் வகை மீன்களுக்கு வரவேற்பு உண்டு. ஏனெனில் நன்னீர் மீன்களை உடனுக்குடன் பிடித்து, 'பிரெஷ்' ஆக சமைக்கமுடியும் என்பதாலும், புரத சத்து நிறைந்திருப்பதாலும் இந்தவகை மீன்களை மக்கள் விரும்பி ருசிக்கிறார்கள். வெறும் 10 முதல் 20 சதவீதம் நன்னீர் மீன்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மற்றபடி 80 சதவீதம் மீன்களும் உள்ளூர் மக்களால் சுவைக்கப்படுகின்றன. அந்தளவிற்கு நன்னீர் வகை மீன்களின் தேவை அதிகரித்திருக்கிறது.

* சமீபகாலமாக ஆப்பிரிக்கா கெளுத்தி மீன்கள் பற்றிய பல செய்திகள் வருகின்றன? அதுபற்றி விளக்குங்கள்?

ஆப்பிரிக்கா கெளுத்தி வறண்ட நிலப்பகுதிகளில் வளரும் தன்மை கொண்ட அரக்கன் மீன். தண்ணீரில் மட்டுமின்றி சேறு, சகதியிலும் உயிர்வாழும் தன்மை கொண்டது. இது நம் உள்ளூர் நாட்டு மீன்களையும், நாட்டு மீன்களின் முட்டைகளையும் தின்று உயிர்வாழக் கூடியவை என்பதால்தான், இதை வளர்க்க தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வளர்ப்பு மீன்களாக நம் நாட்டிற்குள் நுழைந்திருக்கும் இவை, குளம், குட்டை, ஏரிகளில் புகுந்துவிட்டால், அந்த நீர்நிலையின் மொத்த மீன்வகைகளையும் தின்றுவிடும்.

* வீட்டிற்குள்ளேயே மீன் வளர்க்க முடியுமா?

வீட்டில் காலியாக இருக்கும் இடத்தில் ஒரு பிளாஸ்டிக் தார்பாய் போட்டு, அதில் தண்ணீர் நிரப்பி எளிமையாக மீன் வளர்க்கலாம். ஏன், தண்ணீர் பிடித்துவைக்க பயன்படும் டப்பாக்களில் கூட, நன்னீர் வகை மீன்களை வளர்க்கலாம். புழு, பூச்சிகள், பாசிகள், பாக்டீரியாக்கள் இவை இருந்தாலே போதும் மீன்கள் சத்தாக வளரும்.

* மீன் குஞ்சுகளை எங்கு வாங்குவது?

மாவட்டம் தோறும் மீன் வளர்ப்பு அலுவலகம் மற்றும் மீன் குஞ்சு பொறிக்கும் நிலையங்கள் இருக்கின்றன. அங்கு சென்று அரசு அதிகாரிகளிடம் மீன் வளர்ப்பு ஆலோசனைகளை பெற்று மீன் குஞ்சிகளை வாங்கி வளர்க்கலாம். ஒருசில மாவட்டங்களில் சுய உதவி குழுக்கள் மூலமாக நண்டு வளர்ப்பு, இறால் வளர்ப்பு, நன்னீர் மற்றும் உவர் நீர் மீன் வளர்ப்பு பயிற்சிகளும், பண்ணை அமைக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் மூலமும் பயனடையலாம்.

* மீன் வளர்ப்பு ஆராய்ச்சியில் உங்களுடைய அடுத்தகட்ட முயற்சி என்ன?

முன்பெல்லாம் ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளை அந்தந்த ஊர்மக்களில் உள்ள நீர்ப்பாய்ச்சி, பன்னாடிகள்,நீரணிகாரர், வயற்காரர்,குடும்பர்,மடையர்,குளத்துபள்ளர்

பராமரித்தார்கள், நிர்வகித்தார்கள். இவர்களே நீர் நிலைகளை நிர்வகித்து வந்ததால், நீர் நிலைகளை எப்படி மேம்படுத்துவது, நீர்நிலை உயிரினங்களை எப்படி பெருக்குவது, பாதுகாப்பது, உற்பத்தி செய்வது என நீர் நிலை நிர்வாகத்தில் அவர்கள் எக்ஸ்பெர்ட்டாக இருந்தனர். ஆனால் சமீபகாலமாக இந்த மக்களால், நீர் நிலைகளை நிர்வகிக்கமுடியவில்லை. அதனால்தான் விவசாயத்திலும், நீர் நிலை வளர்ச்சியிலும் சுணக்கம் ஏற்பட்டதாக நான் உணர்கிறேன். அதனால் பழைய பழக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்க இருக்கிறேன்.